செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்




தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் நினைவுநாள் இன்று (11.02.1946)
------------------------------------------

சென்னையில் சாதாரண மீனவர் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் சிங்காரவேலர். தத்துவ ஆய்விலும், அறிவியல் ஆய்விலும், அரசியல் போராட்டத்திலும் ஈடுபட்ட களப்போராளி. பல்வேறு தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றவர். விடா முயற்சியால் சட்டம் பயின்றவர்.

படிப்பு முடிந்ததும் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சென்ற போது அன்றைய காலக்கட்டத்தில்
பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்த நீதிதுறையில் வழக்கறிஞர்களாகவும் இருந்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே. அரிதாக வேறு சாதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இருப்பது மிகக் குறைவு. அந்த சூழலில் தான் மீனவ சாதியில் இருந்து படித்து பட்டதாரியாக வழக்கறிஞராக வழக்காட வந்தார் தோழர் சிங்காரவேலர்.

இதைப் பார்த்து மனம் பொருக்காத சக பார்ப்பன வழக்கறிஞர்கள், ‘நீயெல்லாம் மீன் கூடையோடு இருக்க வேண்டியவன். இப்போது சட்டப்புத்தகங்களை பையிலே வைத்துக் கொண்டு வருகிறாய். உன்னைப் போன்றவர்களுக்கு பழக்கமானது மீன் கூடை தானேஎன நையாண்டி செய்தனர்.

மறு நாள் நீதிமன்றத்திற்கு தோழர் சிங்காரவேலர் தலையில் பறியை (மீன்கள் விற்பதற்கு எடுத்துச் செல்லும் ஓலைக்கூடை) சுமந்தபடி வந்தார். பறியை கீழே இறக்கியபோது அது நிறைய சட்ட புத்தகங்களும், அறிவியல் புத்தகங்களும் நிறைந்திருந்தன. கேலி செய்தவர்கள் வாயடைத்தனர்.

வாயடைப்பதற்காக வெறுமே காட்சிப் பொருளாக கொண்டுவந்தவரல்ல சிங்கார வேலர். உண்மையில் அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் மார்க்சியம், கம்யூனிஸம் உள்ளீட்ட புரட்சி நூல்கள் தடை செய்யப்பட்டிருந்தன. அதுப்போன்ற நூல்களை வைத்திருப்பவர்கள் கடுமையான சிறை தண்டனை பெற்றன ர். அந்நூல்களை வெளிநாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக கப்பலில் வரவழித்து மீன்கூடைக்குள் மறைத்து வைத்து எடுத்துச் சென்று மார்க்சிய, கம்யூனிஸ தத்துவ அறிவை வளர்த்துக் கொண்ட சிந்தனையாளராக இருந்தார். அதனால்தான் பார்ப்பன வழக்கறிஞர்களின் கேலியைக் கண்டு அவமானப்பட்டு ஒதுங்காமல் மீன்கூடைக்குள் சட்ட புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து அதிர வைத்தார்.

எதிர்ப்பு என்பதை வன்முறையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதில்லை. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பகுத்தறிவு தோழர் சிங்காரவேலரிடம் இருந்தது. அதையே அப்போதைக்கு உபயோகித்த சாமர்த்தியசாலியாய் இருந்தார்.

(தோழர் சிங்காரவேலர் வரலாற்றில் இருந்து நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய படிப்பினை இன்னும் நிறைய உண்டு. வாசித்துப் பாருங்கள்)

- தமிழச்சி
11/02/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக